Monday 21 August 2017

முதலமைச்சரை மாற்றக்கோரும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்

ஆளுநருடன் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு: முதலமைச்சரை மாற்றக்கோரி கடிதம் அளித்தனர்

சென்னை:

அதிமுகவில் பிரிந்திருந்த பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அணிகள் நீண்ட இழுபறிக்கு பின்னர் நேற்று ஒன்றாக இணைந்தனர். ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும், பாண்டியராஜன் அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர். 



அ.தி.மு.க. அணிகள் இணைப்பு விழா நடந்த அதே சமயத்தில் டி.டி.வி.தினகரன் வீட்டில் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் திரண்டு ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் நேற்று இரவு ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்ற தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சில நிமிடங்கள் தியானத்தில் ஈடுபட்டனர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் அணிகள் இணைந்தது குறித்து தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். மேலும் ஆளுநரை இன்று காலை சந்திக்க உள்ளதாக தெரிவித்தனர். இதனையடுத்து ஆளுநரை சந்திப்பதற்கு முன்பாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சென்னை சேத்துபட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. பின்னர் அங்கிருந்து அடையாறில் உள்ள தினகரன் இல்லத்திற்கு சென்று ஆலோசனை நடத்தினர். அப்போது விளாத்திகுளம் எம்.எல்.ஏ. உமா மகேஸ்வரி தினகரனை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதனால், இணைப்புக்கு பின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 19-ஆக உயர்ந்தது.இந்நிலையில், காலை சரியாக 10 மணிக்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆளுநர் மாளிகைக்குள் சென்றனர். ஆளுநர் வித்யாசாகர் ராவுடனான இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் வரை நீடித்ததாக தெரிகிறது. அப்போது ஆளுநரிடன் தங்களது கோரிக்கை கடிதத்தை அளித்தனர்.முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மாரியப்பன் கென்னடி, முதலமைச்சர் பழனிசாமி சரிவர செயல்படாததால், அவரை மாற்ற ஆளுநரிடம் கோரிக்கை விடுக்க உள்ளோம் என்றார். அதேபோல், முதலமைச்சரை மாற்றக் கோரி ஆளுநரிடம் மனு அளித்துள்ளோம் என்று எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

எம்.எல்.ஏ. ஜக்கையன் கூறுகையில், ஆட்சியை கவிழ்ப்பது எங்கள் நோக்கம் அல்ல. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, எங்கள் பலம் இன்று தெரியவரும் என்று கூறினார்.இதற்கிடையே, பன்னீர்செல்வம் ஆதரவு அதிமுக எம்.பி.யான மைத்ரேயன் ஆளுநரை சந்திப்பதற்காக கவர்னர் மாளிகைக்குள் சென்றார்.



Thursday 10 August 2017

முதலமைச்சர் மீதும் நடவடிக்கை - தினகரன் ஆவேசம்

Image result for தினகரன் images

தீர்மானத்தில் அதிமுக எனக் குறிப்பிட்டுள்ளது தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு எதிரானது. அதிமுக பெயரையும் இரட்டை இலை சின்னத்தையும் பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது . அதிமுக அதிகாரப்பூர்வ லெட்டர் பேடில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியது தவறானது.  தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தால் இதில் கையெழுத்திட்டவர்கள் பதவி இழக்க நேரிடும். நான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால் பயந்து போய் உள்ளனர்
பொருளாளராக நியமிக்கபட்ட சீனிவாசன் தனது ஊதியத்தை பெற்று உள்ளார். நியமித்த திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக செயல்படும்போது, நான் ஏன் துணை பொதுச்செயலாளராக செயல்படக்கூடாதுஜெயலலிதா இருந்த போதும்  இது போல் நியமன பதவிகள் நியமிக்கபட்டு இருக்கின்றன. துணைபொதுச்செயலாளராக செயல்பட என்னை கட்சியின் சட்டதிட்டங்கள் அனுமதிக்கின்றன.  புதிய பொறுப்பாளர்களை நியமிக்கவும்  நீக்கவும் அதிகாரம் உள்ளது.கட்சி சட்டவிதிகளின்படி உள்ள அதிகாரத்தின் பேரிலேயே புதிய பொறுப்பாளர்களை நியமித்தேன்.கட்சி சட்டவிதிகளின்படி புதிய பொறுப்பாளர்களை நியமிக்க எனக்கு அதிகாரம் உள்ளது
அனைவரும் கையெழுத்திட்டு தான் பொதுச் செயலாளரை தேர்ந்து எடுத்தார்கள். சசிகலா கூறியதால் முதல்வராக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி.பதவியை காத்து கொள்ளவும்  பயம் காரணமாகவும் சிலர் குழப்பம் விளைவித்தால் கட்சி பாதிக்காது. கட்சி வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள் அறுவை சிகிச்சை தேவைப்பட்டால் செய்யப்படும். கட்சிக்கு விரோதமாக செயல்பட்டால் முதலமைச்சர் உள்ளிட்ட எவர் மீதும் நடவடிக்கை எடுப்பேன் . என்னை செயல்படவிடாமல் தடுக்க சசிகலாவால் மட்டுமே முடியும். தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பொதுக்கூட்டங்களில் பங்கேற்க உள்ளேன். நேற்றைய மழையில் முளைத்த காளான்களுக்கு பதில் சொல்ல வேண்டியது இல்லை. கட்சியை பலப்படுத்த நான் நினைத்தால் அமைச்சர்கள் பதவிக்காக பயப்படுகிறார்கள். சசிகலா நியமனத்தை ஆதரித்து தற்போது மறுக்கும் 420க்களுக்கு எல்லாம் இப்போது பதில் சொல்ல முடியாது.  மடியில் கனம் இருப்பதால் சில அமைச்சர்கள் என்னை விலக்க திட்டமிட்டு உள்ளனர். பதவியில் இருக்கிற வரை  சுருட்டிக்கொண்டு செல்வதில் தீர்க்கமாக இருக்கிறார்கள். இந்த ஆட்சியை உருவாக்கியவர்கள் சசிகலா அவர்கள்.  தவறான நடவடிக்கையால் சுய நலத்தால் இந்த ஆட்சிக்கு ஆபத்து வரக்கூடாது என்ற நல்ல எண்ணம் எனக்கு உள்ளது. யார் நல்லவர்கள் யார் நன்றி மறந்தவர்கள் என தொண்டர்களுக்கு தெரியும் வரும் பாராளுமன்ற தேர்தலில் அது தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.


Wednesday 9 August 2017

மோடி தலைமையில் அ.தி.மு.க., அணிகள் இணைப்பு?

அதிமுக, அணிகள் இணைப்பு, மோடி, ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமி, தம்பிதுரை, மைத்ரேயன், ஜெயலலிதா, நிர்வாகிகள்,செம்மலை, மாபா.பாண்டியராஜன்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தன்னுடைய அமைச்சரவையில் இருக்கும் சகாக்கள் மற்றும் கட்சியின் முக்கியத் தலைவர்களை, தலைமைக் கழகம் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சமே, அ.தி.மு.க.,வின் இரு அணிகளையும் இணைப்பதுதான்.நாளை டில்லியில் துணை ஜனாதிபதியாக வெங்கய்ய நாயுடு பதவி ஏற்கிறார். இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக, இன்று மாலை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டில்லி செல்கிறார். அதே போல, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் டில்லி செல்கிறார்.டில்லியில் இருவரும் பிரதமர் மோடியை சந்திக்கவிருப்பதாகவும், அப்போது, இணைப்பு குறித்து இரு தரப்பிலும் பேசி அணிகள் இணைப்பு பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் பரவி உள்ளது.இது குறித்து, அ.தி.மு.க.,வின் முக்கிய பிரமுகர் ஒருவர் கூறியதாவது:அதிமுக பிளவுபட்ட பிறகு, இரண்டு தரப்பிலும், இணைப்புக் குறித்து மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நடந்தே வந்தன. இதற்கிடையில், கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட தினகரன், தன்னிச்சையாக நிர்வாகிகளை நியமித்து குழப்பம் விளைவிக்க, பழனிச்சாமி தரப்பு, கோபம் அடைந்தது. அதுவரை, கொஞ்சம் மந்தமாக இருந்த தங்கள் செயல்பாடுகளை இணைப்பு நோக்கி வேகப்படுத்தியது.ஏற்கனவே பேசி முடிக்கப்பட்டதன் அடிப்படையில், தமிழக முதல்வராக பழனிச்சாமி தொடருவார். கட்சியின் பொதுச் செயலராக நியமிக்கப்படும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சரவைக்குள் வந்து, துணை முதல்வராவார். பன்னீர்செல்வம் அணியில் இருக்கும் பாண்டியராஜனும், செம்மலையும் புதிய அமைச்சர்களாவர். கட்சியின் அவைத் தலைவராக மதுசூதனனும், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனும் இருப்பர்.இரு அணிகளும் இணைக்கப்பட்ட பின், அந்தத் தகவலை தேர்தல் கமிஷனுக்குத் தெரிவித்து, முடக்கப்பட்ட அ.தி.மு.க., பெயரை மீட்டெடுப்பதோடு, இரட்டை இலை சின்னத்தையும் கோரிப் பெறுவர். இதற்காக, செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்தும், இரண்டு தரப்பிலும் செய்யப்படும்.இணைப்புக்குப் பின், பொதுக் குழுவைக் கூட்டி, கட்சிக்கான தேர்தலை நடத்தி, பொதுச் செயலராக பன்னீர்செல்வத்தைத் தேர்வு செய்வர். பின், கட்சியின் மற்ற நிர்வாகிகளை, பன்னீர்செல்வம் நியமிப்பார்.அதன்பின், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் சந்தேகங்களை களைய, தமிழக அரசு சார்பில் விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிடப்படும்; கட்சியில் இருந்து, சசிகலா, தினகரன் தரப்பினர் அனைவரும் முழுமையாக நீக்கி வைத்தும் உத்தரவிடப்படும்.வரும், ஆக.15க்குப் பின், மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும். அதற்கு முன்னதாக, ஒன்றுபட்ட அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணியில் இணைத்துக் கொள்ளப்பட்டு, அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, அ.தி.மு.க., சார்பில், இருவருக்கு மத்திய அமைச்சர் பதவி அளிக்கப்படும். அதற்கான பேச்சுவார்த்தையில், பழனிச்சாமி தரப்பில் இருந்து துணை சபாநாயகர் தம்பிதுரையும், பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து மைத்ரேயன் பெயரும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. கடைசி நேரத்தில், இந்த இருவர் மாறி வேறு யாரும் வரக் கூடும். அமைச்சரவை விரிவாக்கத்தில், பா.ஜ., தரப்பில் அமைச்சராகப் பொறுப்பேற்கவிருக்கும் அமித் ஷாவோடு, அ.தி.மு.க., சார்பிலானவர்களும் பதவி ஏற்பர்.இவ்வாறு அந்த நிர்வாகி கூறினார்.



மெரீனா கடற்கரை ரூ.28 கோடியில் சீரமைப்பு

மெரீனா, எலியட்ஸ் கடற்கரை ரூ. 28 கோடியில் சீரமைப்பு

சென்னை மெரீனா கடற்கரை உலகிலேயே மிகவும் நீளமான மணல் பரப்புமிக்க கடற்கரை என்ற பெயரை பெற்றுள்ளது.சென்னை மாநகர பொதுமக்கள் பொழுது போக்குவதற்கும், காற்று வாங்குவதற்கும், நடைபயிற்சி செய்வதற்கும் இந்த கடற்கரை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மேலும் இந்த கடற்கரையின் அழகை ரசிக்க தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகிறார்கள்.தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் மெரீனா கடற்கரையில் பொது மக்கள், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு பணிக்காக 75 சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட உள்ளது. குடிநீர் வசதி, கழிவறை வசதிகள், குப்பை தொட்டிகள், மருத்துவ முதலுதவிகள், மேற்கூரை இருக்கைகள், மீட்பு படகுகள், கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன.இதேபோல் எலியட்ஸ் கடற்கரையிலும் 26 சி.சி. டி.வி. கேமிராக்கள் பொருத்தப்படுகின்றன. இந்த பணிகளுக்காக ரூ. 28 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சி.சி.டி.வி. கேமிராக்கள் அனைத்தும் தமிழக கடலோர பாதுகாப்பு படை மூலம் கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணிக்கப்படுகிறது.குளிக்கும் போது கடலில் தவறி விழுந்து மூழ்குவோரை உடனடியாக காப்பாற்றி முதலுதவி சிகிச்சை அளிக்க சிறப்பு வசதிகள் செய்யப்படுகிறது. கடற்கரை பகுதியில் தடுப்பு கயிறுகள் கட்டப்பட உள்ளது.கடலில் மூழ்கி தவிப்போரை மீட்டு உடனடியாக சிகிச்சை அளிக்க 108 ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் செய்யப்படுகிறது.இது குறித்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-சென்னை மெரீனா, எலியட்ஸ் கடற்கரை பகுதிகளை நவீன முறையில் சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள், பொது மக்கள் பாதுகாப்புக்காக 100 சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, மருத்துவ வசதிகள் செய்யப்படுகிறது. தமிழக கடலோர பாதுகாப்பு படை கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.இதன் மூலம் பொது மக்கள், சுற்றுலா பயணிகள் பெரிதும் பயன்பெறுவார்கள்.


தொண்டர்கள் சூழ்ச்சியை முறியடிப்பார்கள் - எடப்பாடி

தொண்டர்கள் ஒரே அணியில் நின்று சூழ்ச்சியை முறியடிப்பார்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

அ.தி.மு.க. நிறுவன தலைவரும், மறைந்த தமிழக முதல்- அமைச்சருமான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா தமிழக அரசின் சார்பில் நேற்று மாலை விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலை அருகில் நடந்தது.விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசியதாவது:-
எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தார். பிரதமர் இந்திராகாந்தி, மொரார்ஜிதேசாய், சரண்சிங் ஆகியோரை ஆதரித்தார். அப்போது எம்.ஜி.ஆரை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. இது பற்றி பத்திரிகையாளர்கள் எம்.ஜி.ஆரிடம் கேட்டனர்.அதற்கு எம்.ஜி.ஆர்., நான் இப்போது தனிப்பட்ட நபர் அல்ல. தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர். மக்களின் நலன்தான் எனக்கு முக்கியம். மக்கள் நல திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதற்காக மத்திய அரசுடன் இணக்கமான சூழலை கடைபிடிக்கின்றேன். எதிர்க்கட்சிகள் விமர்சனங்கள் பற்றி எனக்கு கவலை இல்லை என்று தெரிவித்தார்.அந்தவகையில் எம்.ஜி.ஆரின் மனிதநேயமிக்க வழியைத்தான், அம்மாவின் வழியில் வந்த அம்மாவின் அரசும் கடைபிடிக்கிறது.நாட்டில் தேர்தல் நடத்துவதுபோல் காட்டிலும் விலங்குகளுக்கு யார் தலைவன் என தேர்தல் நடந்தது. பொதுவாக காட்டுக்கு சிங்கம்தான் தலைவனாக இருக்கும். ஆனால் புலி, தலைவன் பதவியை அடைய பல சூழ்ச்சிகளை கையாண்டது. அதற்காக நரியை அழைத்த புலி, நான் சிங்கம் கறியை ருசித்தது இல்லை. சிங்கத்தின் கறியை நீ எடுத்து வந்தால் நான் தலைவன் ஆகிவிடுவேன், நீதான் காட்டுக்கு ராஜா என்று புலி ஆசை கூறியது.அதை நம்பி நரி, யானையிடம் சென்று நீ பலசாலி, சிங்கத்தை எதிர்த்து தேர்தலில் நின்றால் நீதான் வெற்றிபெறுவாய் என்று கூறியது. மேலும் அந்த நரி, சிங்கத்திடம் சென்று உன்னை எதிர்த்து யானை தேர்தலில் நிற்கிறது என்று கூறியது. இதை கேட்ட சிங்கம், யானையை வரவழைத்து நடந்த விவரத்தை கேட்டது. அதற்கு யானை, நான் தேர்தலில் நிற்பது பற்றி சொல்லவில்லையே என்றது. நரியின் சூழ்ச்சியை தெரிந்து கொண்ட சிங்கம், காக்கையை அழைத்து நரிக்கு பரிசு வைத்திருப்பதாகவும், அதனை அழைத்து வருமாறும் கூறியது. அதன்படி பரிசு பெறுவதற்காக நரி ஓடி வந்தது. அப்போது சிங்கமும், யானையும் ஒன்றாக சகஜமாக இருந்ததை கண்டு நரி அச்சத்துடன் சென்றது. கடைசியில் புலி மற்றும் நரியின் சூழ்ச்சி பலிக்கவில்லை.
காட்டில் பல சூழ்ச்சிகள் நடைபெற்றதுபோல், நாட்டிலும் பலர் சூழ்ச்சி செய்கிறார்கள். ஒருபோதும் அவர்களது சூழ்ச்சி வெற்றிபெறாது. மற்றவர்கள் செய்யும் குழப்பத்தையும், சூழ்ச்சியையும் கழக தொண்டர்கள் ஒரே அணியில் நின்று முறியடிப்பார்கள்.


தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்?

தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

நீதிபதி தீபக் மிஸ்ரா, “தமிழ்நாட்டில் தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? நீங்கள் மேட்டூர் அணையை தவிர வேறு அணை எதுவும் கட்டிக்கொள்ள முடியாதா?” என்று கேள்விகள் எழுப்பினார்.அதற்கு சேகர் நாப்டே, கர்நாடகம் மேடான பகுதியில் அமைந்துள்ளதால் அங்கு அதிக அளவில் தண்ணீரை எளிதாக சேமித்து வைக்க முடியும் என்றும், தமிழ்நாடு சமதளத்தில் இருப்பதால் தண்ணீரை தேக்கி வைக்க முடியாது என்றும் கூறினார்.என்றாலும், “தமிழ்நாட்டில் தண்ணீரை தேக்கி வைக்க வேறு வழியை நீங்கள் முயற்சிக்கவில்லையா?” என்று நீதிபதி கேட்டார்.அதற்கு சேகர் நாப்டே, “ஏற்கனவே கூறியது போல தமிழ்நாட்டின் நிலப்பரப்பு தட்டையானது என்பதால் தண்ணீரை நிறுத்தி தேக்கி வைப்பது கடினம் என்றும், மேட்டூரில் அளவுடன்தான் தேக்கி வைக்கமுடியும் என்றும், தமிழ்நாட்டுக்கு பாதகமாக அமைந்த இந்த அம்சத்தை காவிரி நடுவர் மன்றம் கருத்தில் கொள்ளவில்லை” என்றும் தெரிவித்தார்.அப்போது பாலி நாரிமன் குறுக்கிட்டு, “மேகதாது தமிழ்நாட்டின் எல்லையில்தான் உள்ளது. அங்கு ஒரு அணையை கட்டி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர வேண்டும் என்று நாங்கள் முயற்சிக்கிறோம். ஆனால் தமிழ்நாடு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது” என்று கூறினார்.
அதற்கு தமிழக அரசு வக்கீல் ஜி.உமாபதி, “மேகதாது நீர்மின்சார திட்டத்தின் வரைவு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு உள்ளது. ஆனால் அங்கு அணை கட்டப்பட்டால் மேட்டூருக்கு நீர்வரத்து மிகவும் குறைந்து காவிரி டெல்டா பகுதி கடுமையாக பாதிக்கப்படும். அதனால்தான் தமிழ்நாடு ஆட்சேபம் தெரிவிக்கிறது” என்றார்.அவர் இவ்வாறு கூறியதும் நீதிபதிகள், “இந்த வழக்கில் நாங்கள் தீர்ப்பு வழங்கும் போது தண்ணீர் பங்கீட்டை அமல்படுத்தும் வகையில் ஒழுங்காற்று அமைப்பு ஒன்றை ஏற்படுத்துவோம். இல்லையென்றால் நீங்கள் இரு மாநிலங்களும் நீர்ப்பங்கீட்டுக்காக சண்டையிட்டுக்கொண்டே இருப்பீர்கள்” என்று கூறினார்கள்.அத்துடன், இந்த வழக்கில் அனைத்து தரப்பினரின் வாதங்களும் முடிவடைந்த பிறகு, தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா ஆகிய 3 மாநிலங்களின் சார்பில் தலா ஒரு நிபுணரை நியமித்து அவர்கள் மூலம் தங்கள் தரப்பிலான தொழில்நுட்ப விவரங்களை விவரமாக கோர்ட்டுக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.


போராட்டம் தொடரும்: கதிராமங்கலம் மக்கள் அறிவிப்பு

கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்: கதிராமங்கலம் மக்கள் அறிவிப்பு

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வலியுறுத்தி அக்கிராம மக்கள் அங்குள்ள அய்யனார் கோவில் வளாகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று 31-வது நாளாக போராட்டம் நடைபெற்றது.நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களை தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டி.ஆர். லோகநாதன் சந்தித்து பேசினார். அப்போது கதிராமங்கலம் மக்களுக்கு காங்கிரஸ் கட்சி துணையாக இருக்கும். உங்களுக்குஆதரவு தெரிவிக்க வருகிற 16-ந் தேதி தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வருகை தர உள்ளார் என்றார்.அதே போல் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் (மார்க்சிஸ்டு லெனினிஸ்ட்) மாவட்ட தலைவர் கண்ணையன் கலந்து கொண்டு பேசும் போது, கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தொடங்கும் போது நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து இங்கு பிரசாரம் செய்தோம்.அப்போது எங்களை விரட்டி அடித்தீர்கள். இன்று நாங்கள் கூறியது போல் பாதிப்பு ஏற்பட தொடங்கி உள்ளது. உங்களுக்கு எப்போதும் பக்க பலமாக இருந்து விவசாயத்தையும், தொழிலாளர்களையும் பாதுகாப்போம் என்றார்.போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் கூறியதாவது:-மதுரை ஐகோர்ட்டில் தர்மராஜன், ரமேஷ் ஆகியோருக்கு ஜாமீன் கிடைக்காமல் காலதாமதம் ஆவதற்கு தர்மராஜன் பெயரை தர்மதுரை என்றும் ரமேஷ் பெயரை ராஜேஷ் என்றும் போலீசார் முதல் தகவல் அறிக்கையில் எழுதி உள்ளனர்.கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர்களிடம் கேட்டு பெயரை சரியாக எழுதி இருக்கலாம். அவசர, அவசரமாக பொய் வழக்கு போட்டதால் தான் பெயரை தவறாக எழுதி உள்ளனர் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
இத்தகைய தவறு செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஓ.என்.ஜி.சி. கதிராமங்கலத்தில் இருந்து முற்றிலுமாக வெளியேற வேண்டும் என்கிறோம். எங்கள் கோரிக்கை முழுமையாக நிறைவேறும் வரை அறப்போராட்டம் தொடரும்.