Tuesday 8 August 2017

13நாட்களில் ரஜினி கட்சி தொடங்குவார்: தமிழருவிமணியன்

இன்னும் 13 நாட்களில் ரஜினி புதிய கட்சி தொடங்குவார்: தமிழருவி மணியன்

ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு கலந்த கேள்விக்குறி தமிழக மக்கள் மனதில் நீண்ட நாட்களாக நீடித்து வரும் நிலையில், இன்னும் 2 வாரங்களில் ரஜினி புதிய கட்சித் தொடங்கி விடுவார் என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார்.காந்திய மக்கள் இயக்கம் தலைவரான தமிழருவி மணியன் இது தொடர்பாக கூறி இருப்பதாவது:-
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை நான் போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் சமீபத்தில் இரண்டு தடவை சந்தித்துப் பேசினேன். இரு தடவையும் அவருடன் நான் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக பேசிக் கொண்டிருந்தேன். அப்போது தமிழக அரசியல் நிலவரம் பற்றி நாங்கள் விரிவாக விவாதித்தோம்.தமிழ்நாட்டு மக்கள் மீது நடிகர் ரஜினிகாந்த் அளவு கடந்த அன்பும் பாசமும் வைத்திருக்கிறார். தன்னை வாழ வைத்த தமிழக மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்.
40 ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு வந்ததையும் திரை உலகில் தமிழக மக்கள் தன்னை ஏற்றுக் கொண்டதையும் அவர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதால் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் உள்ளது. அரசியலுக்கு நிச்சயமாக வருவேன் என்று அவர் என்னிடம் உறுதிபட கூறினார்.‘‘நான் அரசியலுக்கு வர நினைப்பது பணம் சம்பாதிக்க அல்ல. மக்களுக்கு சேவை செய்யவே அரசியலுக்கு வர விரும்புகிறேன்’’ என்று ரஜினி என்னிடம் பல முறை கூறி விட்டார். காமராஜர், அண்ணா ஆகியோர் தங்களுக்கு என்று எந்த சொத்தும் சேர்க்காமல் நாட்டு மக்களுக்காக உழைத்தார்கள். அரசியலில் காமராஜரும் அண்ணாவும்தான் தனது ரோல் மாடல் என்று ரஜினி கூறினார். எனவே அந்த வழியில் ரஜினி அரசியலில் சேவையாற்றுவார் என்று நம்புகிறேன்.இன்னும் 2 வாரங்களில் ரஜினி தனது புதிய கட்சியை தொடங்கி விடுவார். அப்போது அவர் உறுதி மொழிகளாக சில அறிவிப்புகளையும் வெளியிடுவார்.
தென்கை நதிகளை இணைப்பது, ஊழலற்ற வெளிப்படையான ஆட்சியை மக்களுக்கு தருவது ஆகியவை அவரது உறுதி மொழிகளில் முக்கிய இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.இவ்வாறு காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் கூறினார்.நடிகர் ரஜினிகாந்த் சமீப காலமாக தமிழருவி மணியன் மட்டுமின்றி மேலும் சிலருடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக ‘‘துக்ளக்’’ ஆசிரியர் எஸ்.குரு மூர்த்தியிடம் பல தடவை அரசியலில் ஈடுபடுவது பற்றி பேசியுள்ளார்.இந்த ஆலோசனைகளின் போது, தமிழகத்தில் ரஜினியால் எவ்வாறு செயல்பட்டால் சிறப்பான ஆட்சியைக் கொடுக்க முடியும் என்று கூறியதாக தெரிகிறது. அந்த யோசனைகளை ரஜினி ஏற்றுக் கொண்டுள்ளார்.ரஜினி கடந்த ஜூன் மாதம் தனது ரசிகர்களை சந்தித்து அரசியலில் ஈடுபடுவது பற்றி கருத்துகளை கேட்டு அறிந்தார். பிறகு அவர் ‘‘போர் வரட்டும் பார்க்கலாம்’’ என்று சூசகமாக கூறினார்.தற்போது மீண்டும் அவர் தனது ரசிகர்களை சந்திக்க உள்ளார். விரைவில் இதற்கான கூட்டம் சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. ரசிகர்களுடனான சந்திப்பு முடிந்த பிறகு பிரமாண்ட பொதுக் கூட்டம் நடத்தப்படும் என்று தெரிகிறது. அந்த கூட்டத்தில் ரஜினி தனது அரசியல் பிரவேசம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என்று சொல்கிறார்கள்.


No comments:

Post a Comment