கர்நாடக மாநிலத்தில் மழை பெய்து வருவதையொட்டி ஒகேனக்கல்லுக்கு அதிக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வருவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.மேட்டூர் அணையிலிருந்து குடிநீருக்காக காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.இந்த நிலையில் குடிநீருக்காக மேட்டூர் அணையிலிருந்து நேற்று முதல் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் ஈரோடு மாவட்ட எல்லையான நெரிஞ்சிப்பேட்டை, அம்மாபேட்டை வழியாக இருகரைகளையும் தொட்டபடி வருகிறது.இதையொட்டி ஈரோடு மாவட்ட காவிரி ஆற்றங் கரையோரப்பகுதி மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
காவிரி ஆற்றில் மீனவர்கள் மீன்பிடிக்க வலைவிரித்திருப்பார்கள். பாய்ந்து வரும் தண்ணீரால் இந்த வலைகள் இழுத்து செல்லப்படும்.மேலும் கரையோரத்தில் பொதுமக்கள் குளிப்பார்கள். தண்ணீர் அதிகமாக வரும்போது வெள்ளத்தில் மக்கள் சிக்கக்கூடும். எனவே பொதுமக்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.நேற்று இரவு பொதுப் பணித்துறை சார்பில் ஊழியர்கள் நெரிஞ்சிப்பேட்டை, அம்மாபேட்டை பகுதிகளுக்கு சென்றனர். அவர்கள் தண்டோரா மூலம் பொது மக்களுக்கு வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை அறிவிப்பு கொடுத்தனர்.
No comments:
Post a Comment