Tuesday, 8 August 2017

பேரறிவாளனை பரோலில் விடுவிக்கவேண்டும்: ராமதாஸ்



பேரறிவாளனின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு உடனடியாக பரோலில் விடுவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனுக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து சிறை மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை வழங்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கும், நளினி, ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோருக்கும் விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனை இருவேறு கட்டங்களில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டாலும் கூட, சாவுத்தண்டனையை விட மிகக் கொடுமையான தண்டனையை அவர்கள் அனுபவித்து வருகின்றனர்.பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு தண்டனைக் குறைப்பு வழங்கப்பட்ட அடுத்த வாரமே ஏழு தமிழர்களையும் விடுதலை செய்யப்போவதாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், அதன்பின் மூன்றரை ஆண்டுகள் ஆகியும் அவர்களின் விடுதலை தாமதமாகிக்கொண்டே செல்கிறது. இச்சிக்கலில் மத்திய அரசு தொடர்ந்த வழக்கு தான் விடுதலைக்கு தடையாக இருக்கிறது என்றாலும் கூட, அந்தத் தடையை உடைக்க ஆட்சியாளர்கள் துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை என்பது தான் உண்மை.விடுதலை குறித்த வழக்கின் தீர்ப்பு தாமதமாகும் நிலையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161 ஆவது பிரிவைப் பயன்படுத்தி ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற யோசனையை ஏற்க தமிழக அரசு மறுத்து வருகிறது. இடைக்கால ஏற்பாடாக அனைவருக்கும் பரோல் எனப்படும் சிறை விடுப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் பயனில்லை.27 ஆண்டுகளாக கொடூரமான சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஏழு தமிழர்களும் வெவ்வேறு பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ராபர்ட் பயஸ், முருகன் ஆகிய இருவரும் கடுமையான மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு கருணைக் கொலை செய்யவும், ஜீவ சமாதி அடையவும் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளனர். நளினி -முருகன் இணையருக்கு சிறையில் பிறந்த மகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்காகக் கூட வெளியில் வர முடியாமல் நளினி தவித்துக் கொண்டிருக்கிறார். ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் மன உளைச்சல் மற்றும் குடும்ப சிக்கலால் பாதிக்கப்பட்டு விடுதலை என்னும் வெளிச்சத்தை எதிர்நோக்கியிருக்கின்றனர்.இவர்களைக் கடந்து பேரறிவாளன் ஏராளமான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார். ஒருபுறம் தந்தையும், தாயும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் கடைசிக்காலத்தில் உடனிருந்து கவனித்துக் கொள்ள வேண்டிய கடமை அழைக்கிறது. மற்றொருபுறம் பேரறிவாளனே சிறுநீரகத் தொற்று உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவரை பரோலில் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் அதிகார மண்டபத்தின் அனைத்து தூண்களிடமும் முட்டி மோதி மண்டியிட்டு வருகிறார். ஆனால், ஆட்சி அதிகாரத்தையும் காப்பாற்றிக் கொள்ளத் துடிக்கும் பினாமி ஆட்சியாளர்கள் பேரறிவாளனுக்கு பரோல் வழங்குவதில் ஆர்வம் இல்லை.பேரறிவாளனுக்கு பிணை வழங்க வேண்டும் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மனு அளித்துள்ளார். அப்போது ஓரிரு நாட்களில் நல்ல செய்தி வரும் என்று முதல்வர் நம்பிக்கை அளித்துள்ளார். அதுமட்டுமின்றி, கடந்த மாதம் இதே நாளில் தமிழக சட்டப்பேரவையில் இதுதொடர்பாக உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, பேரறிவாளனை பரோலில் விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று வாக்குறுதியளித்தார். ஆனால், ஒரு மாதமாகியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.பேரறிவாளனை பரோலில் விடுக்க யாருடைய உதவியும் தேவையில்லை. மாநில அரசு நினைத்தால் இந்த நிமிடமே விடுதலை செய்ய முடியும். பேரறிவாளனுக்கு பிணை வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை என்று தமிழக அரசுக்கு தலைமை வழக்கறிஞர் பரிந்துரை செய்திருப்பதாகத் தெரிகிறது. இத்தனைக்கும் பிறகு யாருடைய அனுமதிக்காக தமிழக ஆட்சியாளர்கள் காத்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.பேரறிவாளன் விஷயத்தில் ஆட்சியாளர்கள் சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாகவே உள்ளது. பேரறிவாளனின் நோய்த்தொற்றுக்கு சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் தான் சிகிச்சை அளிக்க முடியும் என்பதால் அவரை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என்று வேலூர் சிறை நிர்வாகமும், வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவர்களும் பரிந்துரைத்த பிறகும் பேரறிவாளனை புழல் சிறைக்கு மாற்ற ஆட்சியாளர்களுக்கு மனம் வரவில்லை. அவர்களின் அக்கறை அவ்வளவு தான்.பேரறிவாளனின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு உடனடியாக பரோலில் விடுவிக்க வேண்டும். அவர் உள்ளிட்ட 7 தமிழர்களையும் வரும் 15-ம் தேதி விடுதலை நாளையொட்டி நிரந்தரமாக விடுதலை செய்வதற்கான சட்ட நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment