Wednesday, 9 August 2017

புதுக்கோட்டை மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

ஒரே நாளில் 49 பேர் சிறைப்பிடிப்பு சம்பவம்: புதுக்கோட்டை மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்


புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 650-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் தினமும் கடலுக்கு மீன்பிடிக்க செல்கிறார்கள்.இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் மீனவர்களின் படகு மீது மோதியது.இதில் பாலமுருகன் என்ற மீனவர் கடலில் தவறி விழுந்தார். அதேபோல் ரோந்து கப்பலில் வந்த கடற்படை வீரர் விஜயசிங்கா என்பவரும் கடலில் விழுந்துள்ளார். உடனே பாலமுருகனை கடற்படை வீரர்கள் மீட்டு சிகிச்சைக்காக இலங்கைக்கு அழைத்து சென்றனர். அப்போது மீனவர்களுக்கும், கடற்படையினருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
இதற்கிடையே கடலில் விழுந்த கடற்படை வீரர் விஜயசிங்காவை உடனே கண்டுபிடிக்க முடியவில்லை. அவரை மீனவர்கள் சிறைப் பிடித்து வைத்துள்ளதாக நினைத்து 12 விசைப் படகுகளுடன் 41 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றனர். மேலும் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 9 பேரும் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கைதானார்கள்.ஒரே நாளில் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மட்டும் 41 பேர் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கைதான மீனவர்கள் அனைவரும் இலங்கை ஊர்க்காவல் துறை நீதிமன்ற நீதிபதி சபே‌ஷன் வீட்டில் யாழ்ப்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். மீனவர்களை வருகிற 22-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மணல் மேல்குடி, மீமிசல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.
இந்த வேலைநிறுத்தம் காரணமாக படகுகள் அனைத்து மீன்பிடி துறை முகங்கள் மற்றும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நேரடியாகவும், மறைமுக மாகவும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலையிழந்து உள்ளனர். 


No comments:

Post a Comment