Wednesday 9 August 2017

தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்?

தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

நீதிபதி தீபக் மிஸ்ரா, “தமிழ்நாட்டில் தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? நீங்கள் மேட்டூர் அணையை தவிர வேறு அணை எதுவும் கட்டிக்கொள்ள முடியாதா?” என்று கேள்விகள் எழுப்பினார்.அதற்கு சேகர் நாப்டே, கர்நாடகம் மேடான பகுதியில் அமைந்துள்ளதால் அங்கு அதிக அளவில் தண்ணீரை எளிதாக சேமித்து வைக்க முடியும் என்றும், தமிழ்நாடு சமதளத்தில் இருப்பதால் தண்ணீரை தேக்கி வைக்க முடியாது என்றும் கூறினார்.என்றாலும், “தமிழ்நாட்டில் தண்ணீரை தேக்கி வைக்க வேறு வழியை நீங்கள் முயற்சிக்கவில்லையா?” என்று நீதிபதி கேட்டார்.அதற்கு சேகர் நாப்டே, “ஏற்கனவே கூறியது போல தமிழ்நாட்டின் நிலப்பரப்பு தட்டையானது என்பதால் தண்ணீரை நிறுத்தி தேக்கி வைப்பது கடினம் என்றும், மேட்டூரில் அளவுடன்தான் தேக்கி வைக்கமுடியும் என்றும், தமிழ்நாட்டுக்கு பாதகமாக அமைந்த இந்த அம்சத்தை காவிரி நடுவர் மன்றம் கருத்தில் கொள்ளவில்லை” என்றும் தெரிவித்தார்.அப்போது பாலி நாரிமன் குறுக்கிட்டு, “மேகதாது தமிழ்நாட்டின் எல்லையில்தான் உள்ளது. அங்கு ஒரு அணையை கட்டி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர வேண்டும் என்று நாங்கள் முயற்சிக்கிறோம். ஆனால் தமிழ்நாடு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது” என்று கூறினார்.
அதற்கு தமிழக அரசு வக்கீல் ஜி.உமாபதி, “மேகதாது நீர்மின்சார திட்டத்தின் வரைவு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு உள்ளது. ஆனால் அங்கு அணை கட்டப்பட்டால் மேட்டூருக்கு நீர்வரத்து மிகவும் குறைந்து காவிரி டெல்டா பகுதி கடுமையாக பாதிக்கப்படும். அதனால்தான் தமிழ்நாடு ஆட்சேபம் தெரிவிக்கிறது” என்றார்.அவர் இவ்வாறு கூறியதும் நீதிபதிகள், “இந்த வழக்கில் நாங்கள் தீர்ப்பு வழங்கும் போது தண்ணீர் பங்கீட்டை அமல்படுத்தும் வகையில் ஒழுங்காற்று அமைப்பு ஒன்றை ஏற்படுத்துவோம். இல்லையென்றால் நீங்கள் இரு மாநிலங்களும் நீர்ப்பங்கீட்டுக்காக சண்டையிட்டுக்கொண்டே இருப்பீர்கள்” என்று கூறினார்கள்.அத்துடன், இந்த வழக்கில் அனைத்து தரப்பினரின் வாதங்களும் முடிவடைந்த பிறகு, தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா ஆகிய 3 மாநிலங்களின் சார்பில் தலா ஒரு நிபுணரை நியமித்து அவர்கள் மூலம் தங்கள் தரப்பிலான தொழில்நுட்ப விவரங்களை விவரமாக கோர்ட்டுக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.


No comments:

Post a Comment