பெங்களூருவில் வசிப்பவர் தன்யா ராஜேந்திரன். இவர் இணையதள பத்திரிகை ஒன்றில் ஆசிரியராக உள்ளார். இவர் நடிகர் விஜய் நடித்துள்ள சுறா படத்தை பார்த்தபோது, இடைவேளையில் வெளியே வந்துவிட்டதாகவும், ஷாருக்கான் நடித்துள்ள இந்தி படத்தை பார்த்தபோது இடைவேளை வரை கூட பார்க்க முடியவில்லை என்றும் சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவு செய்திருந்தார். இதனால் விஜய் ரசிகர்கள் என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அவரது புகைப்படத்துடன் பலர் அவரை கடுமையாக விமர்சித்துள்ளனர். இதுபற்றி அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகார் மனு தொடர்பாக ‘சைபர் கிரைம்’ போலீசார் விசாரணை நடத்தி 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்நிலையில், பெண் பத்திரிகையளரை விமர்சித்தவர்களுக்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
ஒவ்வொருவரும் கருத்து தெரிவிக்கும் உரிமையுள்ள ஜனநாயகத்தில் சகிப்புத்தன்மையின்மைக்கு இடமில்லை. பேச்சுரிமையின் குரல்வளையை நெறிக்கும் வகையில் சென்னையில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் மீது தொடுக்கப்பட்டிருக்கும் சமூக வலைத்தளத் தாக்குதல் மிகுந்த வருத்தத்திற்கும், கண்டனத்திற்கும் உரியது. இதுபோன்ற அச்சுறுதல்களை விடுப்போருக்கு எதிராக, சட்டத்தின் ஆட்சி முறையாக பிரயோகிக்கப்பட்டு, தவறு செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
No comments:
Post a Comment